search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்கும் நிலை இப்போது இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

    பள்ளிகள் திறப்பு பற்றி யோசிக்கும் நிலை இப்போது இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
    சென்னை:

    கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் நூலகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடுகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    160 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 785 நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் போட்டித்தேர்வுகளை சந்திக்க அனைத்து நூலகங்களிலும் புத்தகங்களை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சென்று மாணவர்கள், தேர்வர்கள் படிக்கலாம். புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய பள்ளிக்கல்வித் துறை சார்பில் குழு அமைக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிடுவார்.

    1 முதல் பிளஸ்-1 வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளை நாடிவரும் அளவுக்கு, அரசு பள்ளிகளின் நிலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு மாணவர்சேர்க்கை பலமடங்கு உயர்ந்துள்ளது.

    கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து கல்வித்துறைக்கு பெற்றோர் தகவல் கொடுத்தால், உடனடியாக அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில பள்ளிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீதிமன்றம் அளிக்கும் உத்தரவு அடிப்படையில் கல்வித்துறை பணிகளை மேற்கொள்ளும்.

    பள்ளிகள் திறப்பு பற்றி இப்போது யோசிக்கும் நிலை இல்லை. இந்த மாதம் இறுதிவரை பள்ளிகள் மூடப்பட்டுதான் இருக்கும். அதன்பிறகு கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து தான் முதல்-அமைச்சர் முடிவுகளை மேற்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×