search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோவாளை பூ மார்க்கெட்
    X
    தோவாளை பூ மார்க்கெட்

    ஓணம் பண்டிகை- தோவாளை பூ மார்க்கெட்டில் சரிவை சந்தித்த பூக்கள் விற்பனை

    ஓணம் பண்டிகை களையிழந்ததன் காரணமாக, தோவாளை பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் குமரி மாவட்ட விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பூ மார்க்கெட் மிகவும் புகழ்பெற்றது.

    இந்த மார்க்கெட்டுக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்வார்கள். மேலும் வெளிநாடுகளுக்கும் கூட இங்கிருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கொரோனா ஊரடங்கால் கோவில் திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள் ரத்தானதால் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை கடந்த சில மாதமாகவே மிகவும் மந்தமாகவே உள்ளது.

    ஓணம் பண்டிகையின் போது இங்கு பெரிய அளவில் வியாபாரம் நடக்கும். ஆனால் தற்போது அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது. ஓணம் பண்டிகை நாட்களில் பல வண்ண பூக்களால் போடப்படும் அத்தப்பூ கோலம் அனைவரின் வீட்டையும் அலங்கரிக்கும். ஓணம் விழாக்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். இதனால் கேரள வியாபாரிகள் பூக்கள் வாங்க தோவாளை பூ மார்க்கெட்டுக்கு படையெடுப்பார்கள்.

    ஓணம் பண்டிகை காலத்தில் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 டன் வரை பூக்கள் விற்பனையாகும். ஓணத்திற்கு முந்தையநாள் மட்டும் 25 முதல் 30 டன் வரை பூக்கள் விற்பனையாகும்.

    ஆனால் கொரோனா காரணமாக ஓணம் பண்டிகை தற்போது வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படவில்லை. இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு பூக்கள் வாங்க கேரள வியாபாரிகள் வரவில்லை. ஓணம் பண்டிகை காலத்தில் விற்பதுபோல் தற்போது பூக்கள் விற்பனை நடக்கவில்லை.

    வருகிற 31-ந்தேதி ஓணம் பண்டிகை வரவுள்ள நிலையில், தோவாளை பூ மார்க்கெட்டில் தினமும் சுமார் ஒரு டன் அளவுக்கே பூக்கள் விற்பனையாகிறது. கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாகவே வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்த வியாபாரிகள், தற்போது மேலும் இழப்பை சந்தித்து வருகின்றனர். எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் நடக்கவில்லையே என்ற கவலையில் இருக்கின்றனர்.

    ஓணம் பண்டிகையை எதிர்நோக்கி தோவாளை பகுதி விவசாயிகள் கேந்தி, வாடாமல்லி, கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களை அதிகளவில் பயிரிடுவார்கள். அதேபோல் தான் இந்த ஆண்டும் பயிரிட்டு இருந்தனர்.

    ஆனால் தற்போது வியாபாரம் அதிகளவில் நடக்காதால், குமரி மாவட்ட விவசாயிகள், பூத்திருக்கும் பூக்களை செடிகளில் இருந்து பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். அவை செடிகளில் அழுகி காய்ந்த நிலையில் கிடக்கிறது.

    இதனால் விவசாயிகளும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். மொத்தத்தில் கொரோனாவால் ஓணம் பண்டிகை களையிழந்ததன் காரணமாக, தோவாளை பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் குமரி மாவட்ட விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×