search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு சந்தை வளாகத்தில் சிஎம்டிஏ அதிகாரிகள் குழு ஆய்வு செய்வதை காணலாம்
    X
    கோயம்பேடு சந்தை வளாகத்தில் சிஎம்டிஏ அதிகாரிகள் குழு ஆய்வு செய்வதை காணலாம்

    கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படுமா?- சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு சந்தை வளாகத்தில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நேற்று ஆய்வில் ஈடுபட்டனர். இதனால் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.
    சென்னை:

    ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான வியாபாரிகள் தனியார் திருமண மண்டபங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டனர்.

    இதையொட்டி கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாத இறுதியில் கோயம்பேடு சந்தை முழுமையாக மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து காய்கறி சந்தையானது சென்னையை அடுத்த திருமழிசை துணைக்கோள் நகரத்துக்கும், பழ சந்தையானது மாதவரம் பஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டது. வானகரத்தில் விரைவில் பூ மார்க்கெட் அமைய இருக்கிறது. உணவு தானிய கிடங்குகளுக்கு இன்னும் மாற்று இடம் ஒதுக்கப்படாத நிலை இருக்கிறது.

    நோய்த்தடுப்பு நடவடிக்கை என்று முதலில் ஒப்புக்கொண்டாலும், பின்னர் வியாபாரிகள் மாற்று இடங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். காய்கறி-பழ சந்தையில் பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனுமதிக்கப்படாததும், வாகனங்கள் வந்து செல்ல போதுமான இடவசதி இல்லை என்பதும் வியாபாரிகள் தரப்பில் சொல்லப்பட்டன. காய்கறி, பழங்களை சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்குகள் இல்லை என்றும், கோயம்பேடு சந்தை போல வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

    மேலும் வியாபாரிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். ‘கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும், அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற தயார் என்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

    கோயம்பேடு சந்தை மூடப்பட்டாலும் தினந்தோறும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சந்தை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தற்போது ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் சீரமைப்பு பணியும் நடந்து வந்தன. இதனால் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற செய்யும் வகையில் நேற்று கோயம்பேடு சந்தை வளாகத்தில் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலாளர் டி.கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. சந்தை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு மற்றும் தூய்மை பணிகளையும் துரிதப்படுத்த அதிகாரிகள் குழு உத்தரவிட்டது.

    இதனால் கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஏறக்குறைய 4 மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு சந்தை திறப்பு பற்றி வெளியாகும் தகவல்களாலும், அதிகாரிகளின் ஆய்வுகளாலும் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். விரைவில் கோயம்பேடு சந்தை புதுப்பொலிவுடனும், பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளுடனும் திறக்கப்படலாம் என்று கோயம்பேடு சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×