search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்வி சேகர்
    X
    எஸ்வி சேகர்

    எஸ்.வி.சேகரை கைது செய்வதாக இருந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்- ஐகோர்ட்டு

    தேசிய கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்வதாக இருந்தால் ஐகோர்ட்டுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேசிய கொடியை அவமதித்ததாக பிரபல நடிகரும், பா.ஜ.க. பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

    அதன்படி அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று காலை 11 மணியளவில் வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை மதியம் 2 மணி வரை நடந்தது.

    போலீசார் எஸ்.வி.சேகரிடம் விசாரணை நடத்திய அதேநேரத்தில், அவர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுஅரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் வக்கீல் வெங்கடேஷ் மகாதேவன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

    விசாரணையின்போது நீதிபதி, “விசாரணைக்கு வந்துள்ள மனுதாரரை போலீசார் கைது செய்ய போகிறார்களா?” என்று கேட்டார். அதற்கு குற்றவியல் வக்கீல், “அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவதை பொருத்து போலீசார் முடிவு எடுப்பார்கள். இதுகுறித்து பிற்பகலில் கேட்டு தெரிவிக்கிறேன்.” என்று கூறினார்.

    இதன்பின்னர், பிற்பகலில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்தபோது, ‘எஸ்.வி.சேகரிடம் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை போலீசார் விசாரணை நடத்தியதாகவும், தேசிய கொடி நிறம் குறித்து காந்தி கூறிய கருத்து குறித்த ஆதாரங்களை தாக்கல் செய்யவேண்டும் என்றும், வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்றும் போலீசார் உத்தரவிட்டுள்ளதாக குற்றவியல் வக்கீல் கூறினார்.

    இதையடுத்து இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் எஸ்.வி.சேகரை கைது செய்வதாக இருந்தால் ஐகோர்ட்டுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
    Next Story
    ×