search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்
    X
    தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்

    தூத்துக்குடியில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தாலோ, தயாரித்தாலோ குண்டர் சட்டத்தில் நடவடிக்கை - மாவட்ட எஸ்.பி தகவல்

    தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தாலோ, தயாரித்தாலோ குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேல மங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் பிச்சையா பாண்டியன். இவருடைய மகன் துரைமுத்து (வயது 29).
    பிரபல ரவுடியான இவர் மீது ஏரல், ஸ்ரீவைகுண்டம், நெல்லை பேட்டை ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த துரைமுத்து பின்னர் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

    எனவே அவரை பிடிப்பதற்காக, ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. நெல்லை அருகே தூத்துக்குடி மாவட்ட எல்லையான வல்லநாடு அருகே மணக்கரை மலையடிவாரத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் துரைமுத்து கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்தார். அவர்களை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றபோது, துரைமுத்து திடீரென்று போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார்.

    இதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் (26) தலைசிதறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வெடிகுண்டு வெடித்ததில் துரைமுத்துவும் இறந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் யாரேனும் நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தால், தயாரித்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    போதைப்பொருட்களை விற்றாலும், வைத்திருந்தாலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    மேலும், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தலை தடுக்க மாவட்டத்தில் 3 தனிப்படைக்கள் அமைத்து கண்காணிக்கப்படுவதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×