search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பாண்டியராஜன்
    X
    அமைச்சர் பாண்டியராஜன்

    மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை- அமைச்சர் பாண்டியராஜன்

    தமிழகத்தில் மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க சாத்தியம் இல்லை. எனினும் இதுபற்றி முதல்-அமைச்சர் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் மீன்பிடி துறைமுகம் பகுதியை ஆய்வு செய்த அமைச்சர், மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-

    தமிழகத்தில் தென் மாவட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரையை 2-ம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று தென்மாவட்ட அமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கொரோனா காலத்தில் அரசு தனது சக்தியை மீறி செலவு செய்துள்ளது. அரசின் வருவாய் 25 சதவீதம் குறைந்தபோதிலும் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்து கொரோனா போரை அரசு எதிர்கொண்டுவருகிறது. இந்த சூழலில் 2-ம் தலைநகர் குறித்த அறிவிப்புக்கு சாத்தியம் இல்லை. இருப்பினும் இது குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு செய்து நல்ல முடிவை அறிவிப்பார்.

    தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விரைவில் பூஜ்ஜியம் என்ற நிலையை அடையும். காசிமேட்டில் சில்லரை மீன் விற்பனையை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.

    தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகை குறித்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவை முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×