search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசியாக பங்கேற்ற குடும்ப நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் தனது மனைவி, கைக்குழந்தையுடன் உள்ளதை படத்தில் காணலாம்.
    X
    கடைசியாக பங்கேற்ற குடும்ப நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் தனது மனைவி, கைக்குழந்தையுடன் உள்ளதை படத்தில் காணலாம்.

    குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறிதுநேரத்தில் இறந்து விட்டானே - போலீஸ்காரரின் தந்தை கண்ணீர் பேட்டி

    ‘குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறிது நேரத்தில் இறந்து விட்டானே...’ என்று போலீஸ்காரர் சுப்பிரமணியனின் தந்தை கண்ணீர் மல்க கூறினார்.
    ஏரல்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மேல மங்கலகுறிச்சியைச் சேர்ந்தவர் துரைமுத்து (வயது 29). பிரபல ரவுடியான இவர், சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார். நேற்று முன்தினம் வல்லநாடு அருகே மணக்கரை மலையடிவாரத்தில் கூட்டாளிகளுடன் பதுங்கி இருந்த துரைமுத்துவை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.

    அப்போது, துரைமுத்து போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசினார். இதில் போலீஸ்காரர் சுப்பிரமணியன் (26) தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். வெடிகுண்டு வெடித்ததில் ரவுடி துரைமுத்துவும் இறந்தார்.

    கொலையான போலீஸ்காரர் சுப்பிரமணியனின் பெற்றோர் பெரியசாமி (60)-பிச்சம்மாள் (57). இவர்களுக்கு 4 மகன்கள். ஒரு மகள். சுப்பிரமணியனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புவனேசுவரியுடன் (25) திருமணம் நடந்தது. இவர்களுக்கு சிவஹரிஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை உள்ளது. சுப்பிரமணியன் தன்னுடைய சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில் சுப்பிரமணியின் சகோதரர் பத்திரகாளிமுத்துவின் குழந்தைக்கு அங்குள்ள கோவிலில் நடந்த முடி காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் தனது மனைவி, குழந்தையுடன் பங்கேற்ற சுப்பிரமணியன், அதன்பிறகுதான் ரவுடி துரைமுத்துவை பிடிக்க சென்றபோதுதான் கொலையானார்.

    மகனை பறிகொடுத்த பெரியசாமி கண்ணீர்மல்க கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்தில் அனைவருமே விவசாயம் செய்து வருகிறோம். சுப்பிரமணியன் மட்டும் போலீஸ் பணியில் சேருவதற்காக சிறுவயதில் இருந்தே அதிக உடற்பயிற்சி செய்து, முயற்சி செய்து வந்தான். அவன் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவான். சுப்பிரமணியன் போலீசில் சேர்ந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் டிரைவராகவும், பின்னர் ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்திலும் பணியாற்றினான். அவன் கடைசியாக 2-வது அண்ணன் மகனின் முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றான்.

    எங்கள் குடும்ப நிகழ்ச்சிக்கு பிறகு பணிக்கு திரும்பிய சுப்பிரமணியன், சிறிதுநேரத்தில் ரவுடியுடன் நடந்த மோதலில் வெடிகுண்டு வீசப்பட்டதில் இறந்து விட்டானே.

    இவ்வாறு அவர் கதறி அழுதவாறு கூறினார்.

    இதையொட்டி பண்டாரவிளை, பண்ணைவிளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் 2 பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி சமரசம் செய்து கலைந்து போக செய்தார். முன்னதாக பிரேத பரிசோதனைக்கு பிறகு சுப்பிரமணியன் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கணவரின் உடலை பார்த்து அவருடைய மனைவி புவனேசுவரி கைக்குழந்தையுடன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் அங்குள்ள கல்லறை தோட்டத்துக்கு சுப்பிரமணியன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஏரல் தாசில்தார் அற்புதமணி மற்றும் அதிகாரிகள், போலீசார் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க சுப்பிரமணியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    Next Story
    ×