search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரே
    X
    கன்னியாகுமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரே

    குமரி மாவட்டத்தில் திருமண விழாவுக்கு அனுமதி பெற மின்னஞ்சலில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

    குமரி மாவட்டத்தில் திருமண விழா நடத்த அனுமதி பெற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் திருமண விழா நடத்த கலெக்டரின் அனுமதி ஆணை பெறுவதற்கு marriagepasskkm@gmail.com மின்னஞ்சல் (இ-மெயில்) மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்கள், அதாவது என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும், நிபந்தனைகள் என்ன?, உறுதிமொழி படிவம் ஆகியவை குமரி மாவட்ட இணையதளமான kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்படி விவரங்களை அறிந்து உரியவாறு விண்ணப்பிக்க வேண்டும்.

    கொரோனா தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் தரப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர் அறியாமையினாலும், பயத்தினாலும் நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகாமல் சுயமாக சிகிச்சை எடுத்துக்கொண்டு மரணத்தை தழுவுகின்றனர். பறக்கை பகுதியை சேர்ந்த முதியவருக்கு காய்ச்சலும், இருமலும் இருந்துள்ளது. 6 நாட்கள் வீட்டிலேயே சுயமாக சளி காய்ச்சலுக்குரிய மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார்.

    அதன்பிறகு சுவாசத்தில் கோளாறு ஏற்படவே அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்ததில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் வந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போதே அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு இடது பக்க உறுப்புகள் செயல் இழந்து விட்டன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.இத்தகைய சம்பவங்கள் மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. இதற்கு மேலும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருக்குமானல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 681 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவிட் கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,318 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 6,328 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    இதில் கோவிட் சுகாதார மையத்திலிருந்து 28 நபர்கள் மற்றும் கோவிட் கவனிப்பு மையத்தில் இருந்து 61 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 13,778 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 5 ஆயிரத்து 383 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 124 பேருக்கு நேற்று அபராதமாக ரூ.12,400 வசூலிக்கப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×