search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறப்பது மோசமான முடிவு- டிடிவி தினகரன்

    சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்திடும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா பாதிப்பின் வீரியம் இன்னும் குறையாத சென்னையில் நாளை முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது, மக்கள் நலனில் அக்கறையில்லாத மிக மோசமான முடிவாகும். இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தலைநகர் சென்னையில் கொஞ்சம் குறைவதைப் போலத் தெரிந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இந்தச் சூழ்நிலையில் நாளை முதல் சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கவிருப்பது முற்றிலும் தவறானது.

    இ- பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்த பிறகும், அதனை ரத்து செய்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று காரணம் கூறி வரும் தமிழக அரசு, இப்போது எப்படி மதுக்கடைகளைத் திறந்துவிட முடிவெடுத்தது என்று தெரியவில்லை. சென்னைக்கு வெளியே ஓரளவுக்குக் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா பரவல், மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்டதற்குப் பிறகுதான் வேகமெடுத்தது என்பது தெரிந்திருந்தும் இப்படியோர் முடிவெடுப்பது துளியும் மனசாட்சி இல்லாத செயலாகும். மக்கள் எப்படி வேண்டுமானாலும் போகட்டும்; அரசுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சியாளர்களின் எண்ணத்தை ஏற்கவே முடியாது. 

    எனவே,சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகப்படுத்திடும் ஆபத்து நிறைந்த டாஸ்மாக் திறப்பு முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×