search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்புலன்ஸ்
    X
    ஆம்புலன்ஸ்

    சேலத்தில் 108 ஆம்புலன்ஸ், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த கோரிக்கை

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற முடியாமல் வீடுகளில் அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 40 மட்டுமே உள்ளன. கொரோனா நோயாளிகளை அழைத்து வருவதற்கு 10 ஆம்புலன்ஸ்களும், விபத்து, தீவிர சிகிச்சை, பிரசவம், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பயன்பாட்டுக்காக 30 ஆம்புலன்ஸ்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஆரம்பத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் கண்டறிந்து அவர்களது வீடுகளுக்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தினமும் பாதிக்கப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், 108 ஆம்புலன்சில் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சேலம் சூரமங்கலம் காமராஜர் நகர், நேரு நகர் பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியாமல் தங்களது வீடுகளில் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களை சொந்த வாகனங்களில் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறையினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதி இல்லாததால் மேட்டூருக்கு அழைத்து செல்லப்பட்டார். எனவே சேலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் மற்றும் கூடுதல் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து கலெக்டர் ராமனிடம் கேட்டபோது, ஏற்கனவே உள்ள 108 ஆம்புலன்சுகளை தவிர கூடுதலாக 4 ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பு 200 பேர் வந்த நிலையிலும் சிகிச்சை பெறுவதில் எவ்வித சிரமும் ஏற்படவில்லை. இருப்பினும் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு இருக்கும் பட்சத்தில் அது குறித்து விசாரித்து உரிய தீர்வு காணப்படும். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
    Next Story
    ×