search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்டம்
    X
    கோப்புப்டம்

    இன்று சுதந்திர தின விழா: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

    நாடு சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், 74-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
    சென்னை:
     
    நாடு சுதந்திரம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் வகையில், 74-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    74-வது சுதந்திர தினத்தையொட்டி தமிழக மக்கள் ஆரோக்கியமான உடல் நலத்தையும், ஒளிமயமான எதிர்காலத்தையும் பெறவேண்டும் என்று என்னுடைய இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பல நாடுகளுக்கு மத்தியில், நமது நாடு பெருமையோடு முன்னோக்கி பீடு நடைபோடுகிறது.

    நமது நாடு சுயசார்புடையது. அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி, ஆழ்ந்த கலாசாரம் மற்றும் சமூக ஒத்திசைவுக்காக அனைத்து நாடுகளாலும் நமது நாடு மதிக்கப்படுகிறது. இந்த தருணத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நம்முடைய நாட்டின் சுதந்திரத்திற்கான உன்னத காரணத்துக்காக, தியாகம் செய்த துணிச்சலான ஆன்மாக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவோம். நமது நாட்டை வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையில் அழைத்துச்சென்றவர்களுக்கு நாம் நன்றியை தெரிவிப்போம்.

    தேசபக்தி நம்முடைய எண்ணங்களை நிரப்புவதோடு, நம்முடைய நாட்டு மக்கள் மீதான அக்கறையும் இதயங்களில் ஆதிக்கம் செலுத்தட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சுதந்திரதின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    இந்திய திருநாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்த பொன்னான நாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் இக்காலக் கட்டத்தில், தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, நோய் தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவீதம் அதிகமாகி உள்ளது. மக்களின் முழு ஒத்துழைப்போடு, கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து தமிழ்நாடு முழுமையாக மீண்டு, மீண்டும் வெற்றி நடை போடும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்த இனிய நாளில், நமது தாய் திருநாட்டை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி, வல்லரசு நாடாக உயர்த்திடவும், தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ செய்திடவும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளமார்ந்த சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:- அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை, சமத்துவமான சமுதாயம், அடித்தட்டு மக்களுக்கு சமூகநீதி, அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி ஆகியவை சாத்தியமாகும் நிலை உருவாக வேண்டும். அத்தகைய நிலையை உருவாக்க உழைப்பதற்கு இந்த விடுதலை நாளில் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

    பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்:- அனைவரையும் அரவணைத்து, அனைவரின் வளர்ச்சிக்கும் அயராது பாடுபடும் நமது பிரதமரின் அயராத உழைப்பில் தேசத்தை உயர்த்திட, நாமும் தேசத்தை முன்னிறுத்தி, தேச நலனுக்காய் உழைப்போம் என்று இந்த சுதந்திர தினத்தன்று உறுதி ஏற்போம். பிரதமர் தலைமையில் புதிய பாரதத்தை உருவாக்குவோம்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:- வருங்காலம் நோயில்லாத நாடாக, பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பிலும், கல்வியிலும், தொழில் துறையிலும் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்க வேண்டும். அதற்கு இயற்கையும், இறைவனும் துணை நிற்க வேண்டும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:- சுதந்திரம், ஜனநாயகம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமை, கூட்டாட்சி, மாநில உரிமைகள், பெண்ணுரிமை, பன்முகத்தன்மை போன்ற அரசியல் சாசனத்தின் விழுமியங்களை பாதுகாக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஆர்.முத்தரசன்:- நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து வகுப்புவாத, மதவெறி சக்திகளை முறியடிக்க சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம்.

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்:- ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற எண்ணத்தோடு ஜனநாயகத்தின் பாதையில் பயணித்து, அனைத்து தரப்பு மக்களும் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலும் சமத்துவம் பெறுவதற்கு ஒன்றுபட்டு உழைத்திடுவோம்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:- ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை மனதில் கொண்டு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை உரக்க சொல்லி, பெற்ற சுதந்திரத்தை பேணி காத்திட உறுதி ஏற்போம்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபராக், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன், தி.தேவநாதன் யாதவ், எம்.வி.சேகர், சேம.நாராயணன், முத்து ரமேஷ் நாடார், இடிமுரசு இஸ்மாயில், காயல் அப்பாஸ், ஆர்.பா.ராஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×