search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனங்களை படத்தில் காணலாம்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனங்களை படத்தில் காணலாம்.

    பொள்ளாச்சி அருகே தொழிலாளர்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனங்கள் பறிமுதல்

    பொள்ளாச்சி அருகே தொழிலாளர்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் பறிமுதல் செய்தார்.
    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பொள்ளாச்சி, ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் தேசிய ஊரக உறுதி அளிப்பு திட்ட தொழிலாளர்கள் உள்பட பல்வேறு பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். மேலும் சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கமாக அமர வைத்து செல்வதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இதையடுத்து பொள்ளாச்சி அருகே வளந்தாயமரத்தில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி தொழிலாளர்களை ஏற்றி வந்த 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி முருகானந்தம் கூறியதாவது:-

    சரக்கு வாகனங்களில் தொழிலாளர்களை ஏற்றி செல்ல கூடாது. ஆனால் இதையும் மீறி கிராமப்புறங்களில் ஆட்களை ஏற்றி செல்கின்றனர். இதற்கிடையில் விதிமுறையை மீறி தொழிலாளர்களை சமூக இடைவெளி இல்லாமல் ஏற்றி சென்றதாக 3 சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வாகனத்தில் சுமார் 15 முதல் 20 வரை பேர் அழைத்து சென்று உள்ளனர். இதன் காரணமாக அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்ல கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×