search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பாலாஜி.
    X
    கைதான பாலாஜி.

    தேன்கனிக்கோட்டை அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக அதிகாரி கைது

    தேன்கனிக்கோட்டை அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த கர்னூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா. அனுசோனை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பணப்பலன்களை பெறுவதற்காக அவரது மகன் கிஷோர்குமார் (வயது 25), என்பவர் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று கண்காணிப்பாளர் பாலாஜி என்பவரை தொடர்பு கொண்டார்.

    அப்போது ரூ.5 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கண்காணிப்பாளர் பாலாஜி கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிஷோர்குமார் இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கிஷோர்குமாரிடம் கொடுத்து அனுப்பினர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரும் அவருடன் சென்று மறைந்து இருந்தனர்.

    தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலகத்தில் நேற்று கண்காணிப்பாளர் பாலாஜியிடம், கிஷோர்குமார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் பாலாஜியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பணப்பலன்களை வழங்க லஞ்சம் வாங்கியபோது கல்வி அலுவலக கண்காணிப்பாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×