search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிட்டிங் நிறுவனம் வாடகைக்கு விடப்படுவது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையை படத்தில் காணலாம்.
    X
    நிட்டிங் நிறுவனம் வாடகைக்கு விடப்படுவது தொடர்பாக வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையை படத்தில் காணலாம்.

    திருப்பூர் பகுதியில் காலியாகும் பனியன் குடோன்கள்- வாடகைக்கு என விளம்பர பதாகை அதிகரிப்பு

    திருப்பூர் பகுதிகளில் பனியன் நிறுவன குடோன்கள் பல காலியாகி வருகின்றன. இதனால் வாடகைக்கு விடப்படும் என்கிற விளம்பர பதாகைகள் மாநகர் பகுதிகளில் வைக்கப்படுகிற எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதனால் திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த குடோன்கள், மூலப்பொருட்கள் விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    நிறுவன உரிமையாளர்கள் தாங்கள் தயாரிக்கும் ஆடைகள் மற்றும் மூலப்பொருட்களை வைக்க குடோன்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் மாநகர் பகுதிகளில் குடோன்கள் வாடகைக்கு கிடைக்காமல் பலரும் புறநகர் பகுதிகளில் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்த அளவிற்கு குடோன்களுக்கு கிராக்கி இருந்தது. தற்போது பின்னலாடை தொழிலில் ஏற்பட்ட மந்தத்தின் காரணமாக பல குடோன்கள் காலியாகி வருகின்றன. இதனால் குடோன் உரிமையாளர்கள் பலரும் மாநகர் பகுதிகளில் குடோன்கள் வாடகைக்கு என்ற விளம்பர பதாகைகளை ஆங்காங்கே வைத்துள்ளனர்.

    இது குறித்து குடோன் உரிமையாளர்கள் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பின் காரணமாக பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சரக்குகள் வெளிபகுதிகளில் அனுப்புவதற்கும் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். இதுபோல் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் திருப்பூருக்கு வராததால் ஆடை வியாபாரம் மிகவும் மந்தமாக இருக்கிறது. பெரும்பாலானவர்களிடம் சரக்கு தேக்கமடைந்த நிலையிலேயே உள்ளது.

    இதன் காரணமாக பலரும் குடோன்களை காலி செய்ய தொடங்கியுள்ளனர். வாடகைக்கு குறிப்பிட்ட பணம் செலவு செய்ய வேண்டும் என்பதால், இவ்வாறு செய்து வருகிறார்கள். இதன் காரணமாக தற்போது மாநகர் பகுதிகளில் நிட்டிங் உள்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படும் குடோன்கள் காலியாகி விட்டன. இதன் காரணமாக காலியாகும் குடோன்களை மீண்டும் வாடகைக்கு விடுவதற்காக, குடோன் உரிமையாளர்கள் மாநகர் பகுதிகளில் பல இடங்களில் குடோன்கள் வாடகைக்கு என்ற விளம்பர பதாகைகளை வைத்துள்ளனர். நாளுக்கு நாள் இந்த பதாகைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×