search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை மாநகராட்சி மூடியது

    கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்ததை அடுத்து, சென்னை மாநகராட்சி அந்த மையத்தை மூடியது.
    சென்னை:

    சென்னையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டது.

    இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்த வகையில் சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக விடுதியை ஒப்படைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. ஆனால் மாணவர்களின் உடைமைகள் இருந்ததால் விடுதியை ஒப்படைக்க முடியாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு பதிலாக பல்கலைக்கழகத்தின் பல்வேறு கட்டிடங்கள் ஒதுக்கப்பட்டன. அங்கு 1,300 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

    இந்த மையத்தில் தீவிர பாதிப்பு இல்லாத நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. 98 ஆயிரத்து 736 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 10 ஆயிரத்து 953 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல கொரோனா மையங்களில் படுக்கைகள் காலியாக உள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கொரோனா மையத்தில் தற்போது 5 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வந்ததால், அந்த மையத்தை மாநகராட்சி மூடியுள்ளது. மேலும் அந்த 5 பேரும் கிண்டி கிங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கொரோனா மையத்தில் படுக்கைகள் எதுவும் மாற்றப்படாமல் அப்படியே கொரோனா மையமாகவே தொடரும் எனவும், தேவைப்பட்டால் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×