search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனிமொழி எம்.பி.
    X
    கனிமொழி எம்.பி.

    நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது - கனிமொழி

    நான் இதுவரை யாருக்கும் மொழியாக்கம் செய்ததே கிடையாது என தி.மு.க எம்.பி. கனிமொழி கூறினார்.
    சென்னை:

    தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சென்னை விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் நம்முடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் வகையில் சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது தமிழகத்தில் மட்டும் நடக்கும் பிரச்சினை அல்ல. பல இடங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய பிரச்சினை.

    எல்லா இடங்களிலும் இப்படி இருக்கக்கூடிய மனப்பான்மையை சரிசெய்தால் சாதாரண மக்களும் இந்தியர்கள்தான்; அவர்களுக்கும் நாட்டில் மரியாதை இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தும்.

    நான் இதுவரை யாருக்கும் இந்தியில் மொழியாக்கம் செய்து பேசியதே கிடையாது. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்குகூட பேசியதாக நினைவு கூட இல்லை. இந்தி தெரிந்தால்தான் மொழியாக்கம் செய்து பேச முடியும். நான் படித்த பள்ளியில் 2 மொழி தான். ஆங்கிலம், தமிழ் மட்டும் படித்தேன்.

    டெல்லிக்கு சென்று இத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தி கற்றுக்கொள்ளவில்லை. இது எல்லா தலைவர்களுக்கும் தெரியும். நான்தான் இந்தியில் மொழிபெயர்த்ததாக கூறினால் அதை நிரூபிக்க வேண்டும். எனக்கோ, வேறு யாருக்கோ இந்தி தெரியுமா?, தெரியாதா? அதை தாண்டி இந்தி தெரிந்தால்தான் இந்தியர்களாக இருக்க முடியும் என சொல்வது எவ்வளவு பெரிய அவமானம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதைப் புரிந்து கொள்ளாமல் எனக்கு இந்தி தெரியுமா?, தெரியாதா?. மொழிபெயர்ப்பு செய்தேனா? என்பது பெரிய விஷயம் கிடையாது. இதை நான் மட்டும் சொல்லவில்லை. மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரம் கூட தனக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாக பகிர்ந்துள்ளார்.

    குமாரசாமி உள்பட பலர் தங்களுடைய உணர்வுகளை, சம்பவங்களைப் பகிர்ந்து உள்ளனர். இந்தி தெரிந்தால்தான் இந்தியாவில் இருக்க முடியும். ஒரு மதத்தைப் பின்பற்றினால்தான் நாட்டில் இருக்க முடியும் என்பதை கண்டிக்க வேண்டும் என தெரிவித்தார்.
    Next Story
    ×