search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
    X
    கலெக்டர் அலுவலகத்தில் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    சேலத்தில் பெண் உயிரிழந்த சம்பவம்: நீதி கேட்டு உறவினர்கள் திடீர் தர்ணா

    பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு அந்த பெண்ணின் உறவினர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் வேலுமணி. எலுமிச்சை பழம் வியாபாரி. கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி சின்னக்கடை வீதியில் ஊரடங்கி மீறி எலுமிச்சை கடை வைத்து வியாபாரம் செய்ததாகக் கூறி அவரை டவுன் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    இதையறிந்த வேலுமணியின் தாயார் பாலாமணி போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மகனை விட்டு விடுமாறு கேட்டுள்ளார். ஆனால் வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் அவரது தாய் பாலாமணி நீண்ட நேரமாக போலீஸ் நிலையத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சிறிது நேரத்தில் திடீரென பாலாமணி மயங்கி விழுந்ததால் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதையறிந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரித்தனர். இது தொடர்பாக கடந்த மே மாதம் 9-ந் தேதி மற்றும் 15-ந் தேதி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும், பாலாமணியின் மரணத்திற்கு நீதி கேட்டும் நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அவரது உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த டவுன் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து பாலாமணியின் உறவினர்கள் கூறுகையில், இந்த வழக்கை வாபஸ் பெறுமாறு காவல்துறைக்கு தொடர்புடைய சிலர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இதுவரை பாலாமணி உயிரிழப்பு தொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை. டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு செய்யும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம், என்றனர்.
    Next Story
    ×