search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் திருட்டு நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வீடு
    X
    தஞ்சையில் திருட்டு நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் வீடு

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 9 பவுன் நகை - ரூ.82 ஆயிரம் கொள்ளை

    தஞ்சையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 9 பவுன் நகை-ரூ.82 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார்சாலை காயிதேமில்லத் நகர் 6-ம் தெருவில் வசித்து வருபவர் சண்முகம்(வயது52). இவர் மாவட்ட குற்றப்பதிவேடு கூடத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர், மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.

    காயம் ஏற்பட்ட அவரது வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, குணம் அடைந்துவிட்டார். அறுவை சிகிச்சையின்போது காலில் பிளேட் வைக்கப்பட்டதால் அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு சண்முகம் செல்வது வழக்கம்.

    அதன்படி இன்று(திங்கட்கிழமை) திருச்சியில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்வதற்காக முன்பதிவு செய்திருந்தார். இதற்காக கடந்த 7-ந் தேதியே வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்று திருச்சி மாத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் சண்முகம் தங்கியிருந்தார்.

    வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த மர்மநபர்கள் சுற்றுச்சுவர் மீது ஏறி வீட்டு வளாகத்திற்குள் குதித்தனர். பின்னர் வீட்டின் முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து திறந்தனர். அதற்கு அடுத்ததாக இருந்த மரக்கதவை கடப்பாரையை கொண்டு நெம்பி, திறந்து வீட்டிற்குள் சென்றனர்.

    அங்கிருந்த பீரோவை உடைத்து உள்ளே இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.82 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு, பின்பக்க கதவை திறந்து தப்பி சென்றுவிட்டனர். இந்தநிலையில் நேற்றுமதியம் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை உறவினர் ஒருவர் பார்த்து, சண்முகத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர் குடும்பத்தினருடன் காரில் புறப்பட்டு தஞ்சைக்கு வந்தார். அங்கு கதவு, பீரோ திறக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சண்முகம் தகவல் தெரிவித்தார். வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீத்தாராமன், சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், வீட்டில் இருந்த பொருட்களை மோப்பம் பிடித்து விட்டு வெளியே வந்தது. ஆனால் வீட்டைவிட்டு வெளியே செல்லாமல், மர்மநபர்கள் ஏறி தப்பி சென்ற சுற்றுச்சுவர் அருகே சென்று நின்றுவிட்டது. நேற்றுமுன்தினம் மழை பெய்த காரணத்தினால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கதவு, பீரோ மற்றும் சுவர்களில் பதிவான ரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இது குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×