search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ‘அறம் பிறழ்கின்ற போது நான் இவ்வுலகில் அவதரிப்பேன்’ என்றுரைத்த பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை  கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை  மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    ‘கண்ணன் பிறந்தான் - எங்கள் கண்ணன் பிறந்தான்
     இந்தக் காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்
     திண்ணமுடையான் - மணி வண்ணமுடையான்
     உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்’

    என்று மகாகவி பாரதியார் அவர்கள், தெய்வக் குழந்தையாம் கண்ணனின் பிறப்பை போற்றி பாடுகிறார். பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழங்கள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து, சின்னக் குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை மாவில் நனைத்து, இல்லம் நெடுக பதித்து, குழந்தை ஸ்ரீகிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.

    ஒப்பற்ற ஞான நூலான பகவத் கீதையை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், பகவத் கீதையின் போதனைகளான அனைவரிடத்திலும் அன்பு செலுத்துதல், பலன் கருதாது கடமையை செய்தல், பற்றற்று இருத்தல், எளிமையாக அடக்கத்துடன் வாழ்தல் போன்றவற்றை  மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி, மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்தி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது  மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   
    Next Story
    ×