search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்லதுரை
    X
    செல்லதுரை

    ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவுடி 4-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது

    சேலம் கிச்சிப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட ரவுடி 4-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை(வயது 34). கடந்த மாதம் 14-ந் தேதி சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரால் கிச்சிப்பாளையம் கோவிந்தசாமி நகரை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் இருந்து 1,500 கிலோ ரேஷன் அரிசி, 8 கேன்களில் இருந்த மண்எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் இந்த ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெயை பிரபல ரவுடியான செல்லதுரை தான் அந்த பெண்ணுக்கு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஏற்கனவே ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இதில் அவர் கூறியதின் அடிப்படையில், கிச்சிப்பாளையம் குப்பை கிடங்கு பகுதியில் மறைத்து வைத்திருந்த 22 மூட்டைகளில் இருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது. மேலும் போலீசார் விசாரணையில், அவர் மீது கடந்த ஆண்டு ஏற்கனவே உணவு கடத்தல் தடுப்பு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுதவிர பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் செல்லதுரை கடந்த 2011, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். 

    இந்தநிலையில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாநிலங்களுக்கு கடத்தி சென்று கள்ளச்சந்தையில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தார். இதை பரிசீலித்து செல்லதுரையை 4-வது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.
    Next Story
    ×