search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    நிலைமை சீராகும்போது தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி

    நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும் என்றும், முதலில் மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசுக்கு முக்கியம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்புப் பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம் மாவட்ட மக்கள் பல ஆண்டுகாலமாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தலைவாசல் அருகே கூட்டு ரோட்டில் பிரமாண்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரி உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் வேகமாக, விரைவாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. 6 மாதத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவு பெறுமெனக் கருதுகிறேன்.

    கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு, நேரடியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டால், ரூ.50 லட்சம் வழங்கப்படுமென நான் ஏற்கனவே அறிவித்தேன். மத்திய அரசாங்கமே அதனை காப்பீடு மூலம் கொடுப்பதாக அறிவித்துவிட்டார்கள். மற்றப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் என்று அறிவித்தோம். அதனை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தியுள்ளோம். பிற பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுப் பணியில் ஈடுபட்டிருக்கும்பொழுது தொற்று ஏற்பட்டு இறந்தால் அவர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுக்கிறோம், குடும்பத்தில் தகுதியுள்ளவர்களுக்கு வேலை கொடுக்கிறோம்.

    மாநில அரசின் நிலைப்பாடு இருமொழிக் கொள்கை. தமிழ், ஆங்கிலம் தான். அதை அரசு தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. அதற்கென்று ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, இதன் சாதக பாதகங்களை கண்டறிந்து அளிக்கும் அறிக்கையின்படி அரசு செயல்படும்.

    கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து கேட்கிறீர்கள். இது உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். முதலில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆகவே, இந்தியா முழுவதுமுள்ள நிலைமைக்கு ஏற்றவாறு தமிழ்நாடும் செயல்படும். நம்முடைய மாநிலத்தை பொறுத்தவரை, மக்களைக் காக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நிலைமை சீராகும்போது நிச்சயமாக பள்ளிகள் திறக்கப்படும்.

    இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தால் உடனடியாக வழங்குவதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இ-பாஸ் வழங்குவதற்கு எளிமையான முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தமிழகத்தில் பணியாற்ற விரும்பினால் அவர்களை தாராளமாக அழைத்து வரலாம். அவர்களை அழைத்து வந்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு, பாசிடிவ் என்றால், சிகிச்சை அளிக்கப்படும். நெகடிவ் என்றால், உடனே அவர்களை பணியில் அமர்த்திக் கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை அளித்தால், மாவட்ட கலெக்டர் இ-பாஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வார்.

    ஏற்கனவே சென்னைக்கு போதுமான தளர்வைக் கொடுத்துள்ளோம். ஊரடங்கு என்பது ஒரு கட்டுப்பாடுதான். தனிமைப்படுத்திக் கொள்வதுதான் இதற்கு மருந்து.

    எஸ்.வி.சேகரை ஒரு பெரிய அரசியல் கட்சித் தலைவராக நாங்கள் எண்ணவில்லை. அவர் பாரதீய ஜனதா கட்சியில் இருப்பதாகச் சொன்னால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் நாங்களெல்லாம் வீடு, வீடாகச் சென்று ஓட்டு கேட்டோம். அவர் எங்கு போய் ஓட்டு கேட்டார்?. எங்கேயும் கேட்கவில்லையே?. நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று அ.தி.மு.க. தலைமையில் பாரதீய ஜனதா மற்றும் சில கட்சிகளெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்டோம். அப்பொழுது எந்த இடத்திலும் அவர் பிரசாரம் செய்ததாகத் தெரியவில்லை. அவரை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லையென்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். எனவே அதற்கு பதிலளிக்கத் தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள், ‘தமிழகத்தில் இதே கூட்டணி தொடருமா?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு அவர், ‘தேர்தல் காலத்தில் அதைப்பற்றி பேசலாம்’ என்று பதில் அளித்தார்.
    Next Story
    ×