search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட்
    X
    ஐகோர்ட்

    இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

    ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அவதிப்படும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு இ-பாஸ் வழங்கும் அரசு அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
    சென்னை:

    திருவண்ணாமலையைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சி.எம்.சிவபாபு, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பள்ளி மாணவர்களை ஒரு கும்பல் அழைத்துச் சென்று திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளதாகவும், ஊரடங்குக்கு பின், பள்ளிக்கூடம் திறந்தால் இந்த மாணவர்கள் எல்லாம் படிக்கச் செல்வது கேள்வி குறியாக உள்ளது என்றும் கூறி இருந்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். அப்போது, அவினாசியில் உள்ள ஒரு ஸ்பின்னிங் மில்லில் பள்ளி மாணவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக நீதிபதிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த மில்லில் வேலை செய்த பள்ளி மாணவர்களிடம் நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் பேசினர்.

    பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு, தொழிலாளர் துறை உதவி கமிஷனர், குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள் அனைவரும் கூட்டாக அவினாசியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் சோதனை நடத்தி உள்ளனர். அங்கு இருந்த 331 தொழிலாளர்களில், 133 பேர் 14 வயது முதல் 18 வயது வரையிலான இளம்பருவத்தினர்.

    அவர்களிடம் நாங்கள் (நீதிபதிகள்) காணொலி காட்சி மூலம் விசாரித்தோம். பள்ளிச் செல்லும் அந்த இளம் பருவத்தினர் எப்படி வேலைக்கு சேர்க்கப்பட்டனர்? என்று தெரியவில்லை. இந்த மில் நிர்வாகம், இடைத்தரகர்கள் மூலம் ஏப்ரல்-மே மாத பள்ளி விடுமுறை காலங்களில், படிக்கின்ற மாணவர்களை வேலைக்கு அழைத்து வருகின்றது. வேலையுடன் படிக்கவும் வைப்பதாக கூறுகிறது.

    ஆனால், வேலை பார்த்துக் கொண்டே இவர்கள் எப்படி படிப்பார்கள் என்று தெரியவில்லை. அந்த இளம் பருவத்தினர், தங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறுகின்றனர். எங்களை பொறுத்தவரை அவர்களை மிரட்டி அப்படி பேச வைக்கப்பட்டு உள்ளனர் என்று தெரிகிறது.

    இவர்களில் சிலர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள். அவர்களில் சிலருக்கு தேர்வு முடிவு வெளியானதே தெரியவில்லை. இதை பார்க்கும்போது, இவர்களுக்கு மில் நிர்வாகம் எப்படி கல்வியை வழங்கும் என்பதில் சந்தேகம் உள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில், இந்த பள்ளி மாணவர்களை முறையான இ-பாஸ் இல்லாமல் திருவண்ணாமலையில் இருந்து அவினாசிக்கு அழைத்து வந்துள்ளதாகவும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை, உடல் தகுதி பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    முறையான இ-பாஸ் இல்லாமல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு இவர்கள் எப்படி அழைத்துச் செல்லப்பட்டனர்? அரசு அதிகாரிகள் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு தங்களையும், விதிகளையும் வளைத்து கொண்டு இவர்களை அனுமதித்து இருக்கின்றனர். தற்போது நிலவும் மோசமான சூழ்நிலையிலும், லஞ்சத்துக்காக எப்படியெல்லாம் ஊழல் அரசு அதிகாரிகள் செயல்படுகின்றனர் என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம் ஆகும்.

    உலகமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விட்டது. ஊரடங்கால் வெளிநாடுகளிலும், வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலும் மக்கள் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கின்றனர். அவசர நிகழ்வுகளுக்காக வெளிமாவட்டம் செல்ல வேண்டும் என்றால் முறையாக இ-பாஸ் வாங்கவேண்டும். அந்த இ-பாஸ் கிடைக்காமல் பலர் அத்தியாவசிய வேலைக்கு செல்ல முடியாமல் தவிப்பில் உள்ளனர்.

    ஆனால், புரோக்கர்கள் மூலம் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு ஊழல் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் இ-பாசை வழங்குகின்றனர். தீவிரமான நடவடிக்கை எடுத்து இந்த ஊழலை அரசு தடுக்கவேண்டும். ஊரடங்கால் பொதுமக்கள் பலர் வேலை இழந்து, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல முடியாமல், கடுமையான துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

    இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையை அரசு கண்டுகொள்ளாததால், ஊழல் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பணத்துக்காக தங்களது உடலை கூனி குனிந்து முறைகேடாக இ-பாஸ் வழங்குகின்றனர். இது மோசமான நிகழ்வு ஆகும். ரத்தத்தை குடிக்க தாகத்துடன் அலையும் ஓநாய் போன்ற இந்த அரசு ஊழியர்கள், அதிகாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.

    பள்ளிக்கு செல்லவேண்டிய இந்த இளம் பருவத்தினரை பெற்றோர் வேலைக்கு அனுப்பியது வேதனைக்குரியது. இப்போது அரசு மதிய உணவுடன் இலவச கல்வியை வழங்குகிறது. இதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இது சமுதாயம் சார்ந்த பிரச்சினை என்பதால், இந்த மாவட்டங்களில் அடிக்கடி சோதனைகளை நடத்தி குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சம்பவம் குறித்து ஸ்பின்னிங் மில் நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர் ஆகியோர் மீது செய்யாறு போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ளதாக திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

    இந்த வழக்கில் மில் நிர்வாகம் சார்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனால், இந்த வழக்கை வருகிற 20-ந்தேதிக்குதள்ளிவைக்கிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறி உள்ளனர்.
    Next Story
    ×