search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரூர் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.
    X
    பேரூர் பகுதியில் உள்ள தோட்டத்திற்குள் மழைநீர் தேங்கி நிற்பதை படத்தில் காணலாம்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: வேகமாக நிரம்பும் கோவை குளங்கள்

    நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவையில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தோப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. நேற்று 4-வது நாளாக நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர். நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவையில் உள்ள குளங்களுக்கு வாய்க்கால் மூலம் ஆற்று நீர் திருப்பி விடப்பட்டு உள்ளது.

    இதில் நொய்யல் ஆற்றில் உள்ள முதல் குளமாக கோவை உக்குளம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிரம்பியது. வேடப்பட்டி புதுக்குளம் நேற்று நிரம்பியது. அதில் இருந்து வெளியேறிய உபரி நீர் வாய்க்கால் மூலம் கோளராம்பதி குளத்திற்கு சென்றது. நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 2,200 கன அடிநீர் செல்கிறது. இதன் காரணமாக கோவையில் உள்ள குளங்களுக்கான தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

    ஒண்டிப்புதூரில் இருந்து பட்டணம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது போல் பேரூர் பகுதியில் நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள வாழை மற்றும் தென்னை, பாக்கு மரத்தோப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் ஆற்று தண்ணீர் புகுந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். தொடர் மழை மற்றும் நொய்யல் ஆற்று தண்ணீர் தோப்புகளுக்குள் தேங்கி நிற்பதால், அவை அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் குளத்திற்கு தண்ணீர் செல்லும் சில வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டது. இதை சீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

    இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மேற்குதொடர்ச்சி மழையில் பெய்யும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆற்று தண்ணீர் வாய்க்கால்கள் மூலம் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளது. இதனால் நரசாம்பதி, கோளராம்பதி, குறிச்சி குளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், செங்குளம் உள்ளிட்ட குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதே அளவு தண்ணீர் வந்தால் இன்னும் 2 நாட்களில் குளங்கள் நிரம்பி விடும்.

    உக்குளம், வேடப்பட்டி புதுக்குளம் ஆகிய 2 குளங்கள் முழுவதுமாக நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. பேரூர் பெரிய குளம், உக்கடம் பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. வெள்ளலூர் குளத்திற்கு தண்ணீர் செல்லும் ராஜவாய்க்காலில் 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. அதை உடனடியாக கண்டறிந்து சீரமைத்து உள்ளோம். இருகூர், சூலூர் குளங்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். நொய்யல் ஆறு மற்றும் தண்ணீர் நிரம்பிய குளங்களில் சில இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் ஆர்வமுடன் குதித்து குளித்து மகிழ்கின்றனர். குளங்கள் வேகமாக நிரம்புவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    Next Story
    ×