search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
    X
    சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

    கர்ப்பிணி மரணத்தில் மர்மம்- கரூரில் கிராம மக்கள் சாலை மறியல்

    கரூரில் திருமணமாகி 5 மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    கரூர் மாவட்டம் மோளபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் பஸ் கண்டக்டரான இவர், செங்காட்டுபட்டியை சேர்ந்த அபிராமியை(வயது 21) காதலித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் அவர்கள், பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டு மோளபட்டியில் உள்ள ஆறுமுகத்தின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த அபிராமி, நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அபிராமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே உயிரிழந்த அபிராமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் அபிராமியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கிராம மக்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் காந்தி கிராமத்தில் உள்ள கரூர்- திருச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, திருமணமாகி 5 மாதமே ஆவதால் கோட்டாட்சியரின் விசாரணையின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் சுமார் 1 மணி நேரம் கரூர் -திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருமணமாகி 5 மாதத்தில் கர்ப்பிணி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பால விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×