search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு இருக்கும் காட்சி.
    X
    மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு இருக்கும் காட்சி.

    மேட்டுப்பாளையத்தில் 13 பேருக்கு கொரோனா: உருளைக்கிழங்கு, காய்கறி மார்க்கெட்டை 4 நாட்கள் மூட வேண்டும்

    மேட்டுப்பாளையத்தில் 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் உருளைக்கிழங்கு, காய்கறி மார்க்கெட்டை 4 நாட்கள் மூட வேண்டும் என்று கோட்டாட்சியர் சுரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் மெயின் ரோட்டில் ஜடையம்பாளையம் ஊராட்சியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 75-க்கும் மேற் பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன. நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தினசரி காய்கறிகள் லாரிகள் மூலம் மேட்டுப்பாளை யம் மார்க்கெட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன. மார்க்கெட்டில் ஏலம் முடிந்த பின்னர் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு காய்கறிகள் லாரிகள் மூலம் தினசரி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் மேட்டுப்பாளையம் காய்கறி வர்த்தக சபை தலைவர் மற்றும் மண்டி உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள், கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களது அலுவலகம் மற்றும் காய்கறி மண்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காய்கறி மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    அவரது உத்தரவின் பேரில் மார்க்கெட்டில், நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வினோத்குமார் மேற்பார்வையில் மருத்துவ குழுவினர், 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் மண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் உட்பட 13பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவின்பேரில் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் நேற்று மாலை 4.30 மணிக்கு காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர், மண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 10 தேதி வரை 4 நாட்கள் காய்கறி மார்க்கெட்டை மூட உத்தரவிட்டார். இதையடுத்து காய்கறி மார்க்கெட்டில் நுழைவுவாயிலில் உள்ள 2 கேட்டுகளுக்கும் பூட்டு போட்டு மூடப்பட்டது.

    மார்க்கெட் பகுதி முழுவதும் ஜடையம்பாளையம் ஊராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோட்டாட்சியர் சுரேஷ் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மார்க்கெட்டுக்கு சென்றார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உருளைக்கிழங்கு மண்டிகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 10-ந் தேதி வரை மூட உத்தரவிட்டார். அவருடன் மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி, தேர்தல் துணை தாசில்தார் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர் மூர்த்தி ஆகியோர் இருந்தனர். இது குறித்து கோட்டாட்சியர் சுரேஷ் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் மற்றும் காய்கறி மண்டிகளை இன்று முதல் வருகிற 10-ந் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு காலை, மாலை வேளையில் ஊராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படும். ஊட்டியிலிருந்து வெளியூர்களுக்கு காய்கறிகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை. காய்கறி லாரிகள் மார்க்கெட்டை தவிர்த்து மற்ற பகுதிகளில் காய்கறிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். மார்க்கெட்டில் உள்ள தொழிலாளர்களை பணியில் அமர்த்த கூடாது. அவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×