search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.
    X
    விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்தபடம்.

    ஆவின் நிறுவனம் முன்பு பாலை சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

    பால் கொள்முதலை குறைப்பதை கண்டித்து திருப்பூரில் ஆவின் நிறுவனம் முன்பு விவசாயிகள் பாலை சாலையில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வீரபாண்டி:

    திருப்பூர் மாவட்டத்தில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் கிராமங்களில் விவசாயிகள் கறவை மாடுகள், எருமைகள் மூலம் உற்பத்தியாகும் பாலை தினசரி காலை, மாலை கொள்முதல் செய்து திருப்பூர் ஆவின் நிறுவனத்துக்கு கொண்டு வருகிறார்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் தினமும் 2 லட்சம் லிட்டர் பால் ஆவின் நிறுவனத்திற்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது தினசரி 20 சதவீத பாலை குறைத்துக் கொள்முதல் செய்யுமாறு ஆவின் நிர்வாக மேலாளர் உத்தரவிட்டுள்ளதாக கூறி பால் கொள்முதலை குறைத்துள்ளனர்.

    இதனால் விவசாயிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். பால் உற்பத்திக்கு தேவையான கலப்புத்தீவனம், தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு அனைத்தும் விலை உயர்ந்து விட்ட நிலையில், ஏதோ அன்றாட ஜீவனத்துக்கு என்று இந்த பால் உற்பத்தி இருந்த நிலையில், பாலை கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவது விவசாயிகளுக்கு மிகுந்த மனவேதனை அளித்துள்ளது.

    எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களிடம் அவர்கள் கொண்டு வரும் பாலை முழுவதுமாக கொள்முதல் செய்ய வேண்டும். 20 சதவீதம் திருப்பி அனுப்புகிற உத்தரவை வாபஸ் பெற வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் கொள்முதல் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறவேண்டும், கொள்முதல் செய்யும் பாலுக்கு ஆவின் நிர்வாகம் சங்கங்களுக்கு உடனுக்குடன் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவின் நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஆவின் நிலையம் எதிரே பாலை சாலையில் கொட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் ஆவின் நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    Next Story
    ×