search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் கோவிந்தராவ்
    X
    கலெக்டர் கோவிந்தராவ்

    தென்னை, வாழை சாகுபடி உழவர் உற்பத்தியாளர் குழுக்கள்- கலெக்டர் கோவிந்தராவ் தகவல்

    தஞ்சை மாவட்டத்தில் தென்னை, வாழை சாகுபடி உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்க ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் கோவிந்தராவ் கூறி உள்ளார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் நபார்டு வங்கியின் மூலம் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பது தொடர்பான மாவட்ட அளவிலான முதல் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    இந்தியா முழுவதும் நபார்டு வங்கியின் மூலம் மத்திய அரசின் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் திட்டம் தொடர்பாகவும், பயிர் மற்றும் தேர்வு செய்யப்படும் வட்டார பகுதிகளை முடிவு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்கள் மூலம் 9 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், சுய முன்னேற்ற குழுக்கள் மூலம் 4 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் என 13 குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது தென்னை சாகுபடி அதிக அளவில் பயிரிடப்பட்டு வருவதால் அதை சார்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைப்பதற்கு மாவட்ட கண்காணிப்பு குழுவினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைப்பதற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் விவாதிக்கப்பட்ட குழுவின் முடிவுகள் தேசிய அளவிலான குழு கூட்டத்தில் ஒப்பந்தம் பெறப்பட்ட பிறகு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் பணி தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அதிகாரி பாலமுருகன், வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மனோகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேசன், துணை இயக்குனர் மரியம்ரவிஜெயக்குமார், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×