search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புற்றுநோய் சிகிச்சைபிரிவை திறந்து வைத்து தமிழகஅரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பார்வையிட்டகாட்சி
    X
    புற்றுநோய் சிகிச்சைபிரிவை திறந்து வைத்து தமிழகஅரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பார்வையிட்டகாட்சி

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு - தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.
    நாகர்கோவில்:

    புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 20 ஆண்கள், 14 பெண்கள் என தனித்தனியாக தங்கி, சிகிச்சைபெறும் வகையில் புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பங்கேற்று புற்றுநோய் சிகிச்சைப்பிரிவை திறந்து வைத்தார்.

    அதனை தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் தலைமையில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிசெயல்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு டீன் சுகந்தி ராஜகுமாரி, ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிடமருத்துவர் ஆறுமுகவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் பரிசோதனை முறைகள் குறித்து தளவாய் சுந்தரம் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் இருப்பில் வைத்து கொள்ளவேண்டும், நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ அதிகாரிகள், டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட அனைவருக்கும் முககவசங்கள், கைகழுவும் திரவம் இவை அனைத்தும் தடையின்றி வழங்கப்பட வேண்டும் என தளவாய்சுந்தரம் அறிவுறுத்தினார்.

    மேலும் கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை சார்ந்த அனைத்து பணியாளர்களின் அர்ப்பணிப்பும், பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×