search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்கலாம் - திருவாரூர் கலெக்டர் அழைப்பு

    திருவாரூர் மாவட்ட மாணவ-மாணவிகள் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்கலாம் என கலெக்டர் ஆனந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
    திருவாரூர்:

    உலக பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவர்கள் இளம் வயதிலேயே அறிந்து கொண்டு, கல்வியறிவோடு 
    நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்கும் வகையில் தமிழக அரசால் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் 70 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக தமிழ் வளர்ச்சி துறையால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.

    நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன்கொண்ட மாணவர்களாக இருக்க வேண்டும். இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்றவற்றை தெரிவித்தால் அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்பு பெயர்கள் போன்றவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும்.

    திருவாரூர் மாவட்டத்தில் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ-மாணவிகள் இருப்பின் இப்போட்டியில் பங்கேற்கலாம். ஏற்கனவே இந்த போட்டியில் பரிசு பெற்றவர்கள் மீண்டும் இந்த போட்டியில் கலந்து கொள்ள கூடாது. போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மூன்றாம் தளத்தில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம் அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchiturai.com ) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×