search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ஜெயக்குமார்
    X
    அமைச்சர் ஜெயக்குமார்

    திமுக குடும்ப ராஜ்ஜியம் அதிருப்தியால் கு.க.செல்வம் வெளியேறுகிறார்- அமைச்சர் ஜெயக்குமார்

    திமுக குடும்ப ராஜ்ஜியத்தின் அதிருப்தியால் கு.க.செல்வம் வெளியே வந்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
    சென்னை:

    செயற்கை பவளப்பாறை நிறுவும் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க காசிமேடு துறைமுகம் வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். முன்பு தி.மு.க.வில் இருந்து வெளியேறுபவர்கள் அ.தி.மு.க.வுக்கு செல்வது வழக்கம். இப்போது தமிழக அரசியலில் தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ஜனதா இருக்கிறதா? அ.தி.மு.க. தனிமைப்படுத்தப்படுகிறதா?

    பதில்:- அ.தி.மு.க. ஜனநாயகம் தழைத்து ஓங்கும் கட்சி. தி.மு.க. ஒரு குடும்ப ராஜ்ஜியம். அந்த குடும்ப ராஜ்ஜியத்தின் அதிருப்தியால், கட்சி தொண்டர்களின் குமுறல் வெளிப்பாட்டால் தான் கு.க.செல்வம் வெளியே வந்துள்ளார். அவரை தொடர்ந்து தேர்தல் நேரத்தில் நிறையபேர் வெளியே வருவார்கள். அதன் தொடக்கம் தான் கு.க.செல்வம் வெளியேற்றம்.

    கேள்வி:- அ.தி.மு.க. உருப்பட வேண்டும் என்றால் கட்சி கொடியில் இருந்து அண்ணாவின் படத்தை நீக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்து உள்ளாரே?

    பதில்:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு எஸ்.வி.சேகரை சுட்டிக் காட்டினார். அப்போது, எந்த கொடியை காட்டி இவர் ஓட்டு வாங்கினார். அண்ணா தி.மு.க. கொடி, அண்ணா என்ற பெயரை சொல்லித்தான் அன்று இவர் எம்.எல்.ஏ. ஆனார். இவருக்கு ரோஷம் இருந்தால் அண்ணாவின் கொடியை காட்டித்தான் எம்.எல்.ஏ. ஆனேன் என்று கூறி 5 ஆண்டு சம்பளத்தை திருப்பி கொடுக்க தயாரா? எம்.எல்.ஏ. பென்சன் வேண்டாம் என்று கடிதம் கொடுப்பாரா? இந்த 2 கேள்விக்கும் அவர் பதில் சொல்லட்டும்.

    இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.
    Next Story
    ×