search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    முத்தூர் அருகே எண்ணெய் ஆலை உரிமையாளருக்கு கொரோனா

    முத்தூர் அருகே எண்ணெய் ஆலை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    முத்தூர்:

    முத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட கொடுமுடி ரோடு, மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த 44 வயதுடைய எண்ணெய் ஆலை உரிமையாளர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் தொடர்ந்து நீடித்ததால் நேற்று முன்தினம் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று வெளியிடப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் எண்ணெய் ஆலை உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

    இதைத்தொடர்ந்து முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் கே.பத்மலதா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். ராஜலட்சுமி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் பிரசாத்தாமரைகண்ணன், மார்கினி, வினோதினி தலைமையிலான சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு நேற்று சென்று ஆய்வு செய்தனர்.

    பின்னர் சுற்றுவட்டாரப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது.

    அதன் பின்பு எண்ணெய் ஆலை உரிமையாளர் வசித்து வரும் அவரது வீடு, ஆலை பகுதி, வீதிகள், பொது இடங்கள் ஆகிய பகுதிகள் முழுவதும் தூய்மை பணியாளர்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பிளச்சிங் பவுடர்கள் தூவப்பட்டன.

    எண்ணெய் ஆலை உரிமையாளர் நேற்று மாலை 6 மணிக்கு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனோ வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    மேலும் அவர் வசித்த பகுதியை சேர்ந்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், அவரது பெற்றோர் மற்றும் மனைவி, மகள்கள், மகன் ஆகியோருக்கு இன்று (புதன்கிழமை) காலை அப்பகுதிகளிலேயே சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனை கொரோனா பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட உள்ளது.

    எண்ணெய் ஆலை உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×