search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி வழங்கிய காட்சி
    X
    மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி வழங்கிய காட்சி

    அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் - சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது

    விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது.
    விழுப்புரம்:

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கினால் 2020-21-ம் கல்வியாண்டில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி கடந்த சில வாரத்திற்கு முன்பு பாடப்புத்தகங்களை வழங்கி அவர்களது மடிக்கணினியில் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 2, 3, 4, 5, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்கள் அதே பள்ளியில் கல்வி தொடர வாய்ப்புள்ளதால் அவர்களுக்கு அரசு வழிமுறைகளை பின்பற்றி ஆகஸ்டு 3-ந் தேதி முதல் விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. இதில் 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலிலும், அதனை தொடர்ந்து 2, 3, 4, 5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பையை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

    அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் 1,543 பள்ளிகளிலும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளான 282 பள்ளிகளிலும் ஆக மொத்தம் 1,825 பள்ளிகளில் படிக்கும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 233 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் வழங்கப்பட உள்ளது.

    இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் வரவழைக்கப்பட்டு அந்தந்த பள்ளிகள் வாரியாக மாணவ- மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.

    இந்நிலையில் நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை வழங்கப்பட்டன. விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பை ஆகியவற்றை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி வழங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள மற்ற அனைத்து பள்ளிகளிலும் குறிப்பிட்ட சில மாணவ- மாணவிகளை மட்டும் வரவழைத்து அவர்களை தனித்தனி அறைகளில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்து அவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவற்றை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்கினர்.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியநோஞ்சினோஸ் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் பிரான்சிகா கலந்து கொண்டு 2 -ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 121 மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார். இதில் ஆசிரியைகள் வேதநாயகி, உமா, குமதா, தாமரைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×