search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாசா நிலவின் தென்துருவத்தில் எடுத்த புகைப்படத்தை படத்தில் காணலாம்.
    X
    நாசா நிலவின் தென்துருவத்தில் எடுத்த புகைப்படத்தை படத்தில் காணலாம்.

    நிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் - நாசா புகைப்படங்களை ஆராய்ந்து சென்னை என்ஜினீயர் கண்டுபிடிப்பு

    நிலவின் மேல்பரப்பில் சந்திரயான்-2 ரோவர் கிடப்பதாக சென்னையை சேர்ந்த என்ஜினீயர் கண்டுபிடித்து இஸ்ரோ மற்றும் நாசாவுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய முடிவு செய்தது. இதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை ரூ.978 கோடி செலவில் வடிவமைத்தது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்.3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் தரையிறங்கி சோதனை செய்ய சந்திரயான்-2 விண்கலத்தில் விக்ரம் லேண்ட் ரோவர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து 48 நாட்கள் பயணம் முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டர் உயரத்தில் தரையிறங்க முயற்சித்த போது வெற்றிகரமாக தரையிறக்கம் செய்ய இயலவில்லை. நிலவின் தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டரில் சந்திரயான்-2 லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது.

    இந்தநிலையில் நிலவில் விக்ரம் லேண்டரின் நிலை என்ன? என்பது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வை தொடங்கினார்கள். அமெரிக்காவின் விண்வெளித்துறையான நாசா சில புகைப்படங்களை கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எடுத்து வெளியிட்டது.

    இந்த புகைப்படங்களை ஆய்வு செய்த சென்னையை சேர்ந்த என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் நிலவில் விக்ரம் லேண்டரின் துகள்கள் கிடப்பதை கண்டுபிடித்து இஸ்ரோவுக்கும், நாசாவும் தகவல் தெரிவித்தார். இதனை ஏற்று அவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாசா பாராட்டியது.

    தற்போது கடந்த ஜனவரி மாதம் நிலவில் எடுத்த சில புகைப்படங்களை நாசா கடந்த மே மாதம் வெளியிட்டது. இந்த புகைப்படங்களுடன், கடந்த ஆண்டு வெளியான புகைப்படங்களையும் ஒப்பிட்டு சண்முக சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் அடிப்படையில் கண்டுப்பிடிக்கப்பட்ட புதிய தகவல்களை இஸ்ரோவுக்கும், நாசாவுக்கும் இ-மெயில் மூலம் அவர் அனுப்பி உள்ளார்.

    அதில், சந்திரயான்-2 ன் ரோவர் நிலவின் மேற்பரப்பில் அப்படியே இருப்பதாகத் குறிப்பிட்டு உள்ளார். கடினமான தரையிறக்கம் காரணமாக அதன் உதரிபாகங்கள் சிதைந்ததுடன், விக்ரம் லேண்டரில் இருந்து ரோவர் உருண்டு சில மீட்டர் தூரத்தில் கிடப்பதாக கூறி உள்ளார்.

    இதனை இஸ்ரோவும், நாசாவும் முறையாக உறுதிப்படுத்த வேண்டும். நிலவின் மேற்பரப்பில் ஒரு வெற்றிகரமான மென்மையான தரையிறக்கம் ஏற்பட்டு இருந்தால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு இந்தியா இந்த சாதனையை அடைந்திருக்கும் என்று சண்முக சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
    Next Story
    ×