search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.1 கோடி செலவில் வழங்கப்பட உள்ள நிவாரண பொருட்களை அமைச்சர் வேலுமணி பார்வையிட்ட போது எடுத்த படம்.
    X
    ரூ.1 கோடி செலவில் வழங்கப்பட உள்ள நிவாரண பொருட்களை அமைச்சர் வேலுமணி பார்வையிட்ட போது எடுத்த படம்.

    தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியில் நிவாரண பொருட்கள்- அமைச்சர் வேலுமணி வழங்கினார்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியில் நிவாரண பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி தொடக்க விழா குளத்துப்பாளையம் சின்னசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு 10 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகளாக அதிக அளவிலான பரிசோதனை மேற்கொள்ளுதல், தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்துதல், தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்துதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தல், சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் 22 மாநகர பகுதிகள், 9 ஊரக பகுதிகளில் உள்ள 115 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், டீத்தூள், கடுகு, மிளகு, கோதுமை மாவு, துவரம் பருப்பு, மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட 14 வகையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

    அதுமட்டுமல்லாமல், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து, கோவை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை சிறப்பு முயற்சி எடுத்து வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் 12 லட்சத்து 42 ஆயிரத்து 385 பயனாளிகளுக்கு விலையில்லா உணவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 3 லட்சத்து 71 ஆயிரத்து 313 பயனாளிகளுக்கு முட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான செலவின தொகை ரூ.94 லட்சத்து 83 ஆயிரத்தை அ.தி.மு.க. மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் வழங்கி உள்ளது.

    அதுமட்டுமல்லாமல், முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மூலம் அந்தந்த பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திற் கும் தலா ரூ.1,500 மதிப்பிலான அத்தியாவசிய மளிகை பொருட்களும், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களும் வினியோகிக்கப்பட்டது. மேலும், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன், அத்தியாவசியப் பொருட்கள், சாலையோர வியாபாரிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் என பல்வேறு தரப்பினரின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ததுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இந்தியாவிலேயே அதிகப்படியாக கொரோனா பரிசோதனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான். குறிப்பாக கோவை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 1,28,346 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கடந்த 31-ந் தேதி வரை 4 ஆயிரத்து 816 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 3,325 பேர் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 54 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது 1,442 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தற்போது புதிதாக தொற்று கண்டறியப்படுபவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவிலான பரப்பளவையும், மக்கள் நெருக்கத்தையும் கொண்ட கோவை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு இங்குள்ள மக்களின் ஒத்துழைப்பும், அதிகாரிகளின் அர்ப்பணிப்புமே காரணம். அரசு வழங்கும் அறிவுரைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றி கொரோனாவை கோவையில் இருந்து முற்றிலும் துரத்தியடித்து உலகிற்கே முன்மாதிரியாக மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவண்குமார்ஜடாவத், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், உதவி ஆணையாளர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×