search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மத்திய அரசை கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவாரூர்:

    தமிழக கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் உள்ள கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார்.

    இதில் மாநில துணைத்தலைவர் வரதராஜன், மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் சுப்பையன், மாவட்ட பொருளாளர் நடராஜன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் அகஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் 4,500-க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். இதற்கு மாநில அரசு அதனை தடுக்கும் விதமாக கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

    குறுவை சம்பா சாகுபடிக்கு நிபந்தனையின்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு சம்பா பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை உடன் வழங்க வேண்டும். கர்நாடகாவில் இருந்து உரிய தண்ணீரை காவிரியில் பெற்றுத்தந்து குறுவை பயிரை காப்பாற்றிடவும், சம்பா சாகுபடியை விவசாயிகள் தொடங்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் தமிழக அரசு தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கை விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×