search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் பிளஸ்-1 தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வெளியிட்டபோது எடுத்த படம்.
    X
    நாமக்கல்லில் பிளஸ்-1 தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வெளியிட்டபோது எடுத்த படம்.

    பிளஸ்-1 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 97.14 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

    நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 97.14 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 11-வது இடத்தை பிடித்துள்ளது.
    நாமக்கல்:

    தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்துக்கான தேர்வு முடிவுகளை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் வெளியிட்டார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயகுமார் (நாமக்கல்), ரவி(திருச்செங்கோடு) ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அந்தந்த பள்ளிகளிலும் விளம்பர பலகைகளில் ஒட்டப்பட்டு இருந்த தேர்வு முடிவுகளை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 203 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 635 மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வை எழுதினர். இவர்களில் 20 ஆயிரத்து 45 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    தேர்ச்சி சதவீதம் 97.14 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.19 சதவீதம் குறைவானதாகும். இவற்றில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.53 ஆகும். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.72 ஆகும். மாணவர்களை விட 1.19 சதவீதம் மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவிலான தேர்ச்சி விழுக்காட்டில் நாமக்கல் மாவட்டம் 11-வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    குறிப்பாக அரசு பள்ளிகளை பொறுத்தவரை இந்த ஆண்டு 89 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 857 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8 ஆயிரத்து 403 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.87 ஆகும். கடந்த ஆண்டு 95.43 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதன்படி தற்போது 0.56 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மேலும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை தமிழகத்தில், நாமக்கல் மாவட்டம் 10-ம் இடத்தை பெற்றுள்ளது.

    அதேபோல் மெட்ரிக் பள்ளிகளை பொறுத்தவரை இந்த ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 99.56 சதவீதம் பேரும், சுயநிதி பள்ளிகளை பொறுத்த வரையில் 99.42 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். முழுமையாக அரசு உதவிபெறும் பள்ளிகளை பொறுத்தவரை இந்த ஆண்டு 94.83 சதவீதம் பேரும், சமூகநல பள்ளியில் 100 சதவீதம் பேரும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 79.81 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    Next Story
    ×