search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    கோட்டூரில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்

    கோட்டூரில் மதுக்டை திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோட்டூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் கிராமத்தில் முள்ளிஆறு அருகில் தனியார் இடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி அரசு மதுக்கடை திறக்க போவதாக தகவல் அறிந்த கோட்டூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது இருந்த மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு, மன்னார்குடி தாசில்தார் ஆகியோர் போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மாணவ விடுதி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தீயணைப்பு துறை அலுவலகம் மற்றும் கோமாளப்பேட்டை, கருப்புகிளார், மேலப்பனையூர், உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மக்கள் செல்லும் பாதை உள்ளது.

    மேலும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கும் படித்துறைக்கு அருகிலும் அமைந்துள்ளது. எனவே இங்கு மதுக்கடை திறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பேச்சு வார்த்தையில் கோட்டூர் கிராமத்தில் அரசு மதுபான கடை திறக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டது.

    இதை தொடர்ந்து மீண்டும் அங்கு மதுக்கடை திறக்கப்போவதாக தகவல் வெளியானதால் மதுக்கடை திறக்க கூடாது என வலியுறுத்தி ஊர்மக்களிடம் கையெழுத்து பெற்று அதை கலெக்டரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் கோட்டூர் மதுக்கடை திறக்க டாஸ்மாக் அதிகாரி முயற்சி செய்ததாக தெரிகிறது. 

    இதனால் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, மாவட்டகுழு உறுப்பினர் சிவசண்முகம் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் பந்தல் அமைத்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் பத்மினி, கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இந்த இடத்தில் மதுக்கடை திறக்கப்படமாட்டாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். 

    இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×