search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம் - பாத்திரத்தை அறுத்தெடுத்த பிறகு குழந்தை
    X
    குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம் - பாத்திரத்தை அறுத்தெடுத்த பிறகு குழந்தை

    விளையாட்டு வினையானது- 2 வயது குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்

    ராஜாக்கமங்கலம் அருகே 2 வயது குழந்தை தலையில் பாத்திரம் சிக்கியது. இந்த பாத்திரத்தை அறுத்தெடுத்து தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கன்னங்குறிச்சி நடுவூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு 2 வயதில் நீராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று இரவு கண்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது, சமையலறையில் பாத்திரங்களை வைத்து நீராஜ் விளையாடிக்கொண்டிருந்தான்.

    அப்போது குழந்தையின் சுட்டித்தனமான விளையாட்டு வினையானது. அதாவது, எதிர்பாராத விதமாக குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கியது. இதனால் மூச்சுத் திணறி அபயக்குரல் எழுப்பினான். இதனை கேட்ட தாய், தந்தை இருவரும் பதறியபடி சமையலறைக்கு ஓடி சென்றனர்.

    அப்போது நீராஜின் தலை மற்றும் முகம் முழுவதும் பாத்திரத்தால் மூடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாத்திரத்தை அவர்களால் எடுக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி குளச்சல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜானஸ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சுமார் 20 நிமிடங்கள் போராடி குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரத்தை அறுத்து எடுத்தனர்.

    இதனால் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. அதே சமயத்தில் குழந்தையின் முகம் வீங்கி இருந்தது. பின்னர் டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
    Next Story
    ×