search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே
    X
    குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே

    குமரியில் வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும்- கலெக்டர் அறிவிப்பு

    குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். வழக்கமான கட்டுப்பாடுகள் தொடரும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    நாகர்கோவில்:

    மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு அறிவிப்பின்படி ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஆகஸ்டு 31-ந் தேதி நள்ளிரவு 12 மணி வரை குமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

    ஆகஸ்டு மாதத்தில் 2-ந் தேதி, 9-ந் தேதி, 16-ந் தேதி, 23-ந் தேதி, 30-ந் தேதி ஆகிய 5 ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி குமரி மாவட்டத்தில் அமல்படுத்தப்படும். உரிய அரசு அறிவிப்பின்படி குமரி மாவட்டத்திற்குள் தனியார் மற்றும் அரசு பொது பஸ் போக்குவரத்து ஆகஸ்டு 31-ந் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும். வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் (மருந்து கடைகள் தவிர) வழக்கம் போல காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பொதுமக்களும், வணிகர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். உணவகங்கள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின்படி காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை 50 சதவீத இருக்கைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்தவும், இரவு 9 மணி வரை பார்சல் சேவை வழங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

    முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 175 பேருக்கு நேற்று அபராதமாக ரூ.17,500 வசூலிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 79 ஆயிரத்து 438 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கவனிப்பு மையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 2,974 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் கோவிட் சுகாதார மையத்திலிருந்து 31 நபர்கள் மற்றும் கோவிட் கவனிப்பு மையத்திலிருந்து 106 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 8,245 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4,373 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×