search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.
    X
    நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதை படத்தில் காணலாம்.

    நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீசுக்கு கொரோனா - அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடல்

    நாகர்கோவிலில் சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மூடப்பட்டது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அடுத்தடுத்து போலீசாருக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்த பெண் போலீஸ் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    பெண் போலீசின் கணவர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் பெண் போலீஸ் கடந்த 2 நாட்களாக சளி பிரச்சினையால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது பெண் போலீஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் பணிபுரிந்த அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதே சமயத்தில் அவருடன் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட அனைத்து போலீசாரும் கலக்கம் அடைந்தனர்.

    அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் போலீசுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விவரங்களையும் சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகிறார்கள். மேலும் பெண் போலீசின் குடும்பத்தாருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக போலீஸ் நிலையத்தில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. அதாவது, கிருமி நாசினி தெளிப்பது, பிளச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். மகளிர் போலீஸ் நிலையத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அங்கு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வந்தவர்களையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இதேபோல மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் செயல்பட்டு வரும் எஸ்.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பணியாற்றி வரும் 45 வயதுடைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த அலுவலகம் மூடப்பட்டது. கிருமி நாசினி தெளிப்பு மற்றும் பிளச்சிங் பவுடர் போடுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
    Next Story
    ×