search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் மழையால் தஞ்சைபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள சமுத்திரம் ஏரி நிரம்பி வருவதை படத்தில் காணலாம்.
    X
    தொடர் மழையால் தஞ்சைபுன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே உள்ள சமுத்திரம் ஏரி நிரம்பி வருவதை படத்தில் காணலாம்.

    தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை : அணைக்கரையில் 8 செ.மீ. கொட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி

    தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக அணைக்கரையில் 8 செ.மீ. மழை கொட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் பலத்த மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் மழை இன்றி வெயில் காணப்பட்டது. இரவில் லேசான தூறல் காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்து வந்தது. தஞ்சையில் தொடர்ந்து காலை வரை மழை பெய்து கொண்டே இருந்தது. கும்பகோணம், அணைக்கரை, திருவிடைமருதூர், மதுக்கூர் பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அணைக்கரையில் 8 செ.மீ. மழை கொட்டியது.

    தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவிடைமருதூர், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட சில பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த முன்பட்ட குறுவை நெற்பயிர்கள் மழையால் சாய்ந்தன.

    பட்டுக்கோட்டையில் நேற்று அதிகாலை 2 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை காலை 8 மணி வரை நீடித்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை குறுவை சாகுபடிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று கடைமடை பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. 11.30 மணிக்கு தொடங்கிய இந்த மழை அதிகாலை 5 மணி வரை பெய்தது. தம்பிக்கோட்டை, மகிழங்கோட்டை, அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் அதிராம்பட்டினம் சுப்பிரமணியர் கோவில் தெரு, பஸ் நிலையம், தைக்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் கும்பகோணம் மேலக்காவிரி முஸ்லீம் மெயின் தெரு, பள்ளிவாசல்தெரு, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுக்கூர் சுற்று வட்டார பகதிகளில் நேற்றுமுன்தினம் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 12 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை 6.30 மணிவரை நீடித்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    அணைக்கரை-85, மஞ்சளாறு-52, மதுக்கூர்-47, திருவிடைமருதூர், கும்பகோணம்-36, பாபநாசம்-18, அய்யம்பேட்டை, அதிராம்பட்டினம் 16, தஞ்சை, நெய்வாசல் தென்பாதி-15, பட்டுக்கோட்டை, குருங்குளம்-14, பேராவூரணி, வெட்டிக்காடு-12, பூதலூர்-11, வல்லம்-10, திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி-9, கல்லணை-8, ஒரத்தநாடு-6, ஈச்சன்விடுதி-2.
    Next Story
    ×