search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    குமரியில் பலத்த காற்றுடன் மழை- மரங்கள் வேரோடு சாய்ந்தன

    குமரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    நாகர்கோவில்:

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சாரல் மழையாக வெகு நேரம் வரை பெய்து கொண்டே இருந்தது. அதிகாலை 5 மணிக்கு பிறகு மழை சற்று ஓய்ந்தது. ஆனால் அதன் பிறகும் வானம் மேக மூட்டத்துடனே காணப்பட்டது.

    இதே போல குமரி மேற்கு மாவட்ட பகுதிகள், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    மேலும் மழை பெய்தபோது பலத்த காற்றும் வீசியது. பலத்த காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.

    நாகர்கோவில் அருகே காரவிளையில் 2 மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் ஒரு மரம் மக்கள் நடமாடும் பாதையில் விழுந்தது. இதனால் அந்த வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-13.2, பெருஞ்சாணி-15.4, சிற்றார்-1-22, சிற்றார்-2-24, மாம்பழத்துறையாறு-12, நாகர்கோவில்-7, பூதப்பாண்டி-7, கன்னிமார்-10.2, ஆரல்வாய்மொழி-3, பாலமோர்-8.4, மயிலாடி-7.4, கொட்டாரம்-9, நிலப்பாறை-4.9, இரணியல்-13.6, ஆனைகிடங்கு-10.2, குளச்சல்-13.6, குருந்தன்கோடு-16, அடையாமடை-13, கோழிப்போர்விளை-38, திருவட்டார்-9.6, முள்ளங்கினாவிளை-15, புத்தன்அணை-11.8, திற்பரப்பு-36 என்ற அளவில் மழை பெய்துள்ளது.

    மழை காரணமாக அணைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 546 கன அடி தண்ணீர் வந்தது. இதேபோல பெருஞ்சாணி அணைக்கு 171 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு 153 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது. அதே சமயம் பேச்சிப்பாறை அணையிலிருந்து 685 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 250 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணையில் இருந்து 200 கன அடி தண்ணீரும் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது.
    Next Story
    ×