search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    17½ கிலோ கஞ்சா பறிமுதல் - மூதாட்டி உள்பட 11 பேர் கைது

    திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் சோதனை நடத்தி 17½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.வி.நகரில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் 12 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 23), அவருடைய உறவினர் குணசீலன் (20) ஆகியோரை போலீசார் கைது செய்ததோடு, 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. எனவே, அவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வட்டப்பாறை பகுதியில் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த செவ்வந்து (61) என்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் வேடசந்தூர் நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல்-கரூர் சாலையில் மினுக்கம்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கிப்பிடித்து போலீசார் சோதனையிட்டனர். அதில் 2½ கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, கரூரை சேர்ந்த 6 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பழனி தாலுகா போலீசார் கே.வேலூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நெய்க்காரப்பட்டி 7-வது வார்டை சேர்ந்த பாஸ்கரன் (வயது 35), கே.வேலூரை சேர்ந்த ஆறுமுகம்(50) ஆகியோர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×