search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி யூனியன் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    சிவகாசி யூனியன் அலுவலகம் பூட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    சிவகாசியில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா - அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது

    சிவகாசியில் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
    சிவகாசி:

    சிவகாசி சாட்சியாபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர், என்ஜினீயர் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து நேற்று காலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்தநிலையில் அடுத்த வாரம் யூனியன் கூட்டம் நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து யூனியன் தலைவர் முத்துலட்சுமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. ஓரிரு நாட்களுக்கு தற்காலிகமாக அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கும்.

    பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளின் நடமாட்டம் இருக்காது. இதனால் கொரோனா பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். எனவே யூனியன் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. அடுத்த வாரம் கூட்டம் நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை சரியாகவில்லை என்றால் கூட்டம் வேறு தேதியில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் சிவகாசி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தார். அவர் நேற்று காலை போலீஸ் நிலையம் வந்து வழக்கம்போல் பணிகளை தொடர்ந்தார்.

    முன்னதாக இன்ஸ்பெக்டருக்கு, சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர். இதேபோல் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு பணிக்கு திரும்பிய 5 போலீசாருக்கும் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

    Next Story
    ×