search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணா பல்கலைக்கழகம்
    X
    அண்ணா பல்கலைக்கழகம்

    தரமற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்பட்டதா?- அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்

    தரமற்ற கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்பட்டதாக செய்திகள் பரவியதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
    சென்னை:

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை அண்ணா பல்கலைக்கழகம் தான் கலந்தாய்வை நடத்தியது. கடந்த கல்வியாண்டு முதல் (2019-20) தொழில்நுட்ப கல்வி இயக்ககம் கலந்தாய்வை நடத்தி வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் 89 என்ஜினீயரிங் கல்லூரிகளின் பட்டியலை வெளியிட்டு, அது தரமற்றவை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து அதற்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

    அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சமூக வலைதளங்களில், அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் 89 கல்லூரிகள் தரமற்றது என்றும், அவற்றின் பெயர், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர்சேர்க்கை கோடு எண் மற்றும் ஏனைய தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.

    அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் இதுபோன்ற தரமற்ற கல்லூரிகள், தரமான கல்லூரிகள் என்ற பாகுபாடு செய்யவில்லை என்றும் 89 கல்லூரிகளின் பெயர் பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×