search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீமான்
    X
    சீமான்

    ஓபிசி இடஒதுக்கீடு- வீட்டு வாசலில் பதாகை ஏந்தி போராட்டம் நடத்திய சீமான்

    மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது வீட்டு வாசலில் நின்றபடி போராட்டம் நடத்தினார்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

    இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக  தமிழக அரசு, திமுக, அதிமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

    இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை  தீர்ப்பளிக்கிறது. 

    இதில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இட ஒதுக்கீட்டை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும், அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இன்று முன்னெடுக்கப்படும் அறப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்க வேண்டும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் அழைப்பு விடுத்திருந்தார். காலை 11 மணியளவில் அவரவர் வீட்டுவாசலில் தனிநபர் இடைவெளியோடு போராட்டத்தை நடத்தவும் அவர் வலியுறுத்தியிருந்தார். அதன்படி இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் போராட்டம் நடத்தினார். அப்போது, ஓபிசி இட ஒதுக்கீடு தொடர்பான பதாகையை அவர் ஏந்தி முழக்கம் எழுப்பினார். 
    Next Story
    ×