search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
    X
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

    தென்காசி விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் பழனிச்சாமி

    தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டின் அருகே உள்ள வயலில் மின்வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வனத்துறையினர் 5 பேர் முத்துவை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனை அறிந்ததும் அவரது மகன் நடராஜன் மற்றும் உறவினரும் சேர்ந்து சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றனர்.  சிவசைலம் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது எதிரே வனத்துறை அலுவலர்கள் ஜீப்பில் அணைக்கரை முத்துவை அழைத்து வந்தனர். அவரிடம் மகன் நடராஜன் விசாரித்தபோது உடல்நிலை சரியில்லை என்று கூறினாராம்.

    இதையடுத்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்தபோது, அணைக்கரை முத்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.  உடனே அணைக்கரை முத்துவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை திரண்டு சென்று கடையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவத்தை அறிந்து பூங்கோதை எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் வந்தனர்.

    இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அணைக்கரை முத்து உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கும் உறவினர்களும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு, இறந்த விவசாயியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் தென்காசியில் வனத்துறை விசாரணைக்குச் சென்று உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு நிதியுதவி  வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

    முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறைந்த விவசாயி முத்து குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாவும்,  உயிரிழந்த விவசாயின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி  வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் என தெரிவித்த முதல்வர்,  நீதித்துறை நடுவர் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×