search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டவுசர் கொள்ளையர்கள் நடமாடும் காட்சி. (கண்காணிப்பு கேமராவில் பதிவானது)
    X
    டவுசர் கொள்ளையர்கள் நடமாடும் காட்சி. (கண்காணிப்பு கேமராவில் பதிவானது)

    கோவை இருகூரில் டவுசர் கொள்ளையர்கள் நடமாட்டம்? போலீசார் தீவிர விசாரணை

    கோவை இருகூரில் டவுசர் மட்டும் அணிந்து நடமாடிய மர்ம நபர்கள் கொள்ளையர்களா?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போத்தனூர்:

    கோவை இருகூர் தீபம் நகரில் நேற்று அதிகாலை ஒரு கொள்ளை கும்பல் திரிந்தது. 7 பேர் கொண்ட கும்பலில் உள்ளவர்கள் டவுசர் மட்டும் அணிந்து இருந்ததுடன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி இருந்தனர். அவர்கள் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் அங்குள்ள ஒரு பங்களா வீட்டை நோட்டமிட்டபடி சென்றனர்.

    இந்த கொள்ளை கும்பல் நடமாட்டத்தை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது அவர்களது அனைவரின் உருவமும் பதிவாகி இருந்தது. இது குறித்து குடியிருப்பு மக்கள் சிங்காநல்லூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தபோது, அங்கு நடமாடிய கொள்ளையர்களுக்கு 25 வயதுக்குள் இருக்க வாய்ப்பு உள்ளது. கொள்ளையில் ஈடுபடும்போது யாராவது பிடித்தால் எளிதில் தப்பித்துவிடலாம் என்பதற்காக அவர்கள் டவுசர் அணிந்து இருப்பதுடன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி உள்ளனர்.

    எனவே கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்?, அவர்கள் வேறு எங்கும் சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அந்த கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தற்போது ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில் நகை தொடர்பான குற்றங்கள் மேலும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்குமாறும், விலை மதிப்புள்ள நகையை வீட்டில் வைத்துவிட்டு செல்ல வேண்டாம் என்றும் வங்கி லாக்கர் உள்பட பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்குமாறும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×