search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சள் மூட்டைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் பார்வையிட்ட காட்சி.
    X
    மஞ்சள் மூட்டைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் பார்வையிட்ட காட்சி.

    பாம்பனில் இருந்து இலங்கைக்கு 600 கிலோ மஞ்சள் கடத்திய 3 பேர் கைது

    கொரோனா தாக்கத்தால் பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 600 கிலோ மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பனைக்குளம்:

    ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு உணவு பொருட்களுக்கு பயன் படுத்தும் மஞ்சள் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் ராமேசுவரம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன், தலைமை காவலர்கள் ராம்குமார், கில்டஸ், மாணிக்கம், முனீசுவரன், ராஜ்குமார், பிரபுதுரை உள்ளிட்டோர் நேற்று அதிகாலை 3 மணிக்கு மண்டபம் அருகே வேதாளை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

    சோதனை செய்தபோது அதில் மூட்டைகளில் மஞ்சள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனில் இருந்த பாம்பன் குந்துகால் அருகே முகம்மதியார்புரத்தை சேர்ந்த பாபுஉசேன் (வயது37), வேதாளை வடக்குதெருவை சேர்ந்த அப்துல்முபாரக் ஆகிய 2 பேரை பிடித்து 600 கிலோ மஞ்சள் மூட்டைகளை வேனுடன் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த படகு உரிமையாளர் ஆம்ஸ்ட்ராங் என்பவரையும் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:-

    இலங்கைக்கு இது வரையிலும் பீடி இழை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தான் கடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கத்தால் இலங்கையில் உணவுக்கு பயன்படுத்தப்படும் மிளகு, மஞ்சள் உள்ளிட்ட உணவு பொருட்கள் பல மடங்கு விலை உயர்ந்துள்ளதாக தகவல் வருகிறது. அதனால் கடத்தல்காரர்கள் இங்கு குறைந்த விலையில் மிளகு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கடத்த தொடங்கி உள்ளனர்.

    மண்டபம் அருகே வேதாளையில் வாகன சோதனையில் தனிப்பிரிவு போலீசாரால் 15 மூட்டைகளில் 600 கிலோ மஞ்சள் பிடிபட்டுள்ளது. இவற்றை படகில் கடத்தி சென்று நடுக்கடலில் இலங்கையில் இருந்து வரும் கடத்தல் படகில் மஞ்சளை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அவர்கள் கொடுக்கும் தங்கத்தை பெற்று வர கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக இது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறோம்.

    இலங்கையில் 1 கிலோ மஞ்சளின் இன்றைய விலை ரூ.2,500 என தெரிகின்றது. இலங்கைக்கு உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இவ்வாறு அவர் கூறினார். அப்போது போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் பொறுப்பு சந்தனமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×