search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் எடுத்த புகைப்படத்தை காணலாம்.
    X
    சந்திரயான்-2 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் எடுத்த புகைப்படத்தை காணலாம்.

    சந்திரயான்-2 சேகரித்த அரிய அறிவியல் தகவல்கள்: உலகளாவிய பயன்பாட்டுக்கு அக்டோபரில் வெளியீடு

    சந்திரயான்-2 மூலம் பெறப்பட்ட அரிய அறிவியல் தரவுகள் உலகளாவிய பயன்பாட்டுக்கு வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) உலகிலேயே முதன் முறையாக நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய முடிவு செய்து சந்திரயான்-2 விண்கலத்தை வடிவமைத்தது. இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஆண்டு ஜூலை 22-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க்.3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் தரையிறங்கி சோதனை செய்ய சந்திரயான்-2 விண்கலத்தில் விக்ரம் லேண்ட் ரோவர் கருவி பொருத்தப்பட்டு இருந்தது.

    தொடர்ந்து 48 நாட்கள் பயணம் முடிந்து கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை 1.30 மணிக்கு நிலவில் தரையில் தரையிறங்க முயற்சித்த போது, வெற்றிகரமாக தரையிறக்கம் செய்ய இயலவில்லை.

    இது தொடர்பாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    ஹாலிவுட்டில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ என்ற வெற்றி திரைப்படம் ரூ.978 கோடியில் எடுக்கப்பட்டது. இதை விட குறைந்த பட்ஜெட்டில், சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தினோம். இதைக்கண்டு உலக விஞ்ஞானிகள் வியந்து போனார்கள். சந்திரயான்-2 பணிக்கு சுமார் 140 மில்லியன் டாலருக்கும் குறைந்த அளவு செலவுதான் ஆனது.

    நிலவின் தென் துருவத்தை தொடுவதற்கு சற்று முன்பு நிலவின் தரையில் இருந்து 2 கிலோ மீட்டரில் சந்திரயான்-2 லேண்டர் விக்ரமுடன் தொடர்பை இழந்தது. நிலவில் விக்ரம் லேண்டர் இறங்குவதில் தோல்வி ஏற்பட்டாலும் இந்த திட்டத்திற்கு ஒரு வருடம் பணி ஆயுள் இருந்தது. அதன்படி சந்திரயான்-2 நிலவின் சுற்றுப்பாதை நடவடிக்கையில் தொடர்ந்து இருந்தது.

    தூரத்திலே இருந்து நிலவை கண்காணித்து நிலவின் சுற்றுப்பாதையில் பல படங்கள் மற்றும் பல அறிவியல் தரவுகளை இஸ்ரோவுக்கு விரிவான தகவல்களுடன் அனுப்பி உள்ளது. குறிப்பாக துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது, எக்ஸ்ரே அடிப்படையிலான மற்றும் அகச்சிவப்பு நிறமாலை தாதுத் தகவல்கள், நிலவில் மின்தேக்கி வாயு உள்ளிட்ட பல தரவுகள் பெறப்பட்டு உள்ளன.

    சுமார் 1,056 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பின் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டு உள்ளன. இவை எதிர்காலத்தில் நிலவில் தரையிறங்கும் பணிக்கான தளங்களை வகைப்படுத்தவும் இது பயன்படுத்தப்பட உள்ளது.

    நிலவில் உள்ள மான்சினஸ் சி மற்றும் சிம்பிலியஸ் என் என்ற பகுதிகளில் கடந்த மார்ச் 2-ந்தேதி எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் பெறப்பட்டு உள்ளன. இதனை உலகளாவிய பயன்பாட்டுக்காக வருகிற அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளோம்.

    சந்திரயான்-2 விண்கலத்தின் அறிவியல் சோதனைகளின் முக்கிய கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த வருடாந்திர சந்திர கிரக அறிவியல் மாநாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக அது ரத்து செய்யப்பட்டது.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.
    Next Story
    ×